இசை இறைவனால் வழங்கப்பட்ட அற்புதக் கலையாகும். இசையால் இசையாதார் யாரும் இல்லை. பூமியிலும் வானத்திலும் நிகழக்கூடிய விந்தைகளுக்கெல்லாம் விந்தையாகும் அற்புத விந்தை தான் இசை.

இறைவன் இன்றி எதுவும் இல்லை என்பது மகத்தான உண்மை. எங்கும் இசை, எதிலும் இசை. கடலின் காற்றோ, மழையின் சப்தமோ, மரங்களின் அசைவுகளோ, நடப்பன, பறப்பன, ஊர்வன, மிதப்பன என அணைத்து ஜீவராசிகளிலும் ஜீவனாக இருப்பது இசைதான்.

கர்நாடக இசை மிகப் பழமையான இசை. தெற்கு இந்தியாவில் தோன்றி இன்று உலகெங்கும் வழங்கப்படும் இசை. ஏழு ஸ்வரங்கள் கொண்ட அற்புத இசை. ஸ்ருதியினையும் லயத்தினையும் தனது இரண்டு கண்களாகக் கொண்டது. ராகத்தையும் தாளத்தையும் அடிப்படையாகக் கொண்டது கர்நாடக இசை.

கர்நாடக இசையில் ஒவ்வொரு ராகத்திற்கும் லட்சணமும் லட்சியமும் உண்டு. இவை இரண்டும் ராகத்தின் உடலும் உயிருமாக ஒன்றி வருவன. ஒவ்வொரு ராகத்திற்கும் தனி விதிகள் உண்டு. ஒவ்வொரு ராகத்திற்கும் தனி சக்தி உண்டு. ராகத்தை வழங்கும்போது அதன் லட்சணம் பிழறாமல் லட்சியத்தை நிறைவேற்றும் விதத்தில் வழங்கினால் தான் இசை முழுமைபெறும். இசைப்பவரும் ரசிப்பவரும் இறைவனை சென்றடைய முடியும்.

ராக லட்சணம்

ராகம் என்பது ஸ்வரங்களைக் குறிக்குமா? அல்லது ஸ்ருதியா ? இல்லை அது ஒலிக்கும் விதமா?

ஸ்ருதியுடன் ஸ்வரங்களை இசைத்து, பாடலின் ரசத்தை ஒலி மூலம் மனதிற்கு உணர்த்தி, இறைவனை சென்றடைய வழி வகுக்கும் கருவி தான் ராகம். மகிழ்ச்சியான ராகம் ஒன்று சோகமாக ஒலிக்கக் கூடாது. மொழி அறியாதவர் கேட்டாலும் பாடலின் கருத்தை உணர முடியும் விதத்தில் அமைவதுவே ராகம்.

ராகத்தை வழங்குவதற்கு விதிகள் உண்டு. அதுதான் ராக லட்சணம். ராகத்திற்கு முதல் உருவம் தருவது அதன் ஆரோஹணமும் அவரோஹணமும். இவை ஸ்வரங்களின் ஏற்ற வரிசையையும் இறக்க வரிசையையும் குறிக்கும்.

உதாரணம்: மோஹன ராகத்திற்கு ஸ ரி க ப த ஸ் -  ஸ் த ப க ரி ஸ

இந்த வரையறைக்குள் பாடினால் தான் குறிப்பிட்ட ராகம் ஒலிக்கும்.

ஆரோஹணமும் அவரோஹணமும் சரியாக இருந்தால் மட்டும் ராகம் சரியாக அமையாது. சில நேரங்களில் ராகத்தை இசைக்கும் விதத்தில் கமகம் வேறுபட்டால் ராகமே வேறுபட்டுக் கேட்கும் – ஒரே ஆரோஹணமும் அவரோஹணமும் இருந்தாலும் கூட. ஸ்வரங்களின் பிரயோகமும் ராகத்தின் ஒலியில் மாற்றங்கள் தரும்.

தனது லட்சியத்தை அடைய ஒரு ராகத்தை இசைச்சிற்பமாகச் செதுக்கும் முறைதான் ராக லட்சணம்.

ராக லட்சியம்

ஒவ்வொரு ராகத்தை வழங்குவதற்கும் லட்சியம் உண்டு. இறைவனை சென்றடையும் லட்சியம். கவலைகளை மறக்கச்செய்து மன நிம்மதி தரும் லட்சியம். நோய் தீர்த்து வளம் தரும் லட்சியம்.

ராகங்களுக்கு மருத்துவ குணங்கள் உண்டு. 72 மேளகர்த்தா ராகங்களும் நம் உடலின் 72 முக்கிய நரம்புகள ஆதிக்கம் செய்யும் தன்மை கொண்டவை. ராகத்தின் லட்சணம் மாறாமல் தூய்மையாக இசைக்கும் ஒருவனால் குறிப்பிட்ட நரம்பின் செயல்களை ஆதிக்கம் செய்ய முடியும். மன நிம்மதி மட்டுமின்றி உடல் நலத்திற்கும் ராகங்கள் உதவும்.

சங்கராபரணம்

நிலையாய் நில்லாது அலைபாயும் மனதிற்கு சாந்தம் கிடைக்கும். பக்தியுடன் இந்த ராகத்தை வழங்கினால் மனநிலை பாதிக்கப்பட்டவர்க்கு குணம் கிடைக்கும். “சங்கரனின் ஆபரணம்” – இந்த ராகம் செல்வம் தரும் ராகம்.

கல்யாணி

கல்யாணி என்றால் மங்களம் எனபது பொருள். நம் மனதில் தோன்றும் பயம் என்னும் இருளை நீக்கி ஒளி தரும் ராகம்.

ஷண்முகப்ரியா

இசைப்பவர் மற்றும் இசையைக் கேட்டு ரசிப்பவரின் அறிவினைக்  கூர்மைப்படுத்தும் திறன் கொண்ட ராகம் இது. மனதிற்கு வலிமையும் உயிருக்கு ஊட்டமும் தந்து சக்தி கொடுக்கும் ராகம்.  சிவபெருமானின் ஒளிவீசும் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஷண்முகனுக்குப் பிடித்த ராகம்.

பிலஹரி

வலியினை நீக்கி அன்பென்ற மழையினைப் பொழியும் ராகம் இது. மனதிற்கும் உடம்பிற்கும் வளம் தரும் ராகம்.

ரதிபதிப்ரியா

இல்வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் ராகம். வறுமையை நீக்கி இன்பம் தரும். இந்த ராகத்தின் ஸ்வரப் பிரயோகத்திற்கு தீய எண்ணங்களையும் செயல்களையும் மனதிலிருந்து நீக்கும் அதிசயத் திறன் உண்டு.

ஆபேரி

கவலைகள் நிறைந்து அமைதியை இழந்து தவிக்கும் மனதிற்கு அமைதியும் ஆறுதலும் தந்து குணமாக்கும் ராகம் இது.

மோஹனம்

அழகும் அன்பும் நிறைந்த இடத்தில இருப்பது மோஹனம். காமம், க்ரோதம், மோகம் போன்ற தீய எண்ணங்களை நீக்கி நன்மை தரும் ராகம். மிக அழகாக இசைக்கும் ராகம்.

மாயாமாளவ கௌளை

இசை பயிலும்போது முதன்முதலில் கற்கும் ராகம் இது. மாசினைத் தவிர்க்கும் ராகம். நம் உடம்பில் இருக்கும் தீய பொருட்களையும் மாசினையும் அகற்றும் ராகம். வைகறை நேரத்தில் இயற்கை வளம் கொண்ட சூழலில் இந்த ராகத்தை இசைத்தால் குரல் வளம் பெருகும்.

ஆனந்த பைரவி

கேட்பவர் மனதிற்கும் உடலுக்கும் நிம்மதி தரும் ராகம். இரத்த அழுத்தம் அதிகம் இருப்பவர் இந்த ராகத்தை இசைத்தால் குணம் கிடைக்கும்.

VN:F [1.9.22_1171]
Rating: 6.6/10 (31 votes cast)
VN:F [1.9.22_1171]
Rating: -6 (from 14 votes)
ராகம் - லட்சணமும் லட்சியமும், 6.6 out of 10 based on 31 ratings

Related posts: